கொங்குநாடு – சமணக் கோயில்கள், சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், கல்வெட்டு சாசனம்.Jainism in Kongunadu – Temples, Sculptures, Tamil Brahmi Inscriptions
கொங்குநாடு: சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்கள்
1. சேலம்: சேலம் மாவட்டத்தின் தலைநகரம் இவ்வூர் ஆற்றங்கரையில் ஒரு சமணத் திருவுருவம் கிடக்கிறது. இன்னொரு சமணத் திருவுருவம், கலெக்டர் வீட்டுக்கும் சர்ச்சுக்கும் இடையே உள்ள வழியில் இருக்கிறது.229
2. அதமன் கோட்டை: தர்மாபுரி தாலுகாவில் தர்மாபுரிக்கு மேற்கே 5 மைலில் உள்ளது. இவ்வூரில் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் ஒரு சமணத் திருமேனி காணப்படுகிறது.230
3. தர்மாபுரி: தர்மாபுரி தாலுகாவின் தலைநகர் தர்மாபுரியின் பழைய பெயர் தகடூர் என்பது. இங்கு மல்லிகார்ச்சுனர் கோயில் இருக்கிறது. மல்லிகார்ச்சுனர் என்பது மல்லிநாதர் என்னும் சமண தீர்த்தங்கரரைக் குறிக்கும். இவ்வூருக்கு அருகில் உள்ள ராமக்கா குளக்கரையில் உள்ள சமண உருவங்கள் இவ்வூர் சமணத் திருப்பதி என்பதைத் தெரிவிக்கின்றன. மல்லிகார்ச்சுனர் கோவிலின் முன்மண்டபத் தூணில் உள்ள சாசனம் சக ஆண்டு 815 ஆம் மகேந்திராதிராச நொம்பன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது. நிதியண்ணன் என்பவர் அரசனிடமிருந்து மூலபள்ளி என்னும் கிராமத்தை விலைக்கு வாங்கி இக்கோயில் பஸ்தியைச் செப்பனிடுவதற்காகச் சமண முனிவருக்குத் தானம் செய்ததைக் கூறுகிறது. தானம்பெற்ற சமண முனிவர் மூலசங்கத்து சேனான் வயத்து மொகரீய கணத்தைச் சேர்ந்த சித்தாந்த படாரரின் மாணவர் கனகசேன சித்தாந்த படாரர் என்பவர¢231 ஷெ தூண் கீழ்ப்புறத்தில் உள்ள சாசனம், மகேந்திர நொளம்பன் மகன் அப்பைய தேவன் காலத்தில் எழுதப்பட்டது. இதில், லோகையா என்பவர் புதுகூரு என்னும் கிராமத்தை இக் கோயிலுக்குத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது.232
4. பஸ்தீபுரம்: கொள்ளேகால் தாலுகாவில் கொள்ளே காலுக்குத் தெற்கில் ஒரு மைலில் உள்ளது. இது முன்பு சமணக் கிராமமாக இருந்தது. இப்போதும் ஒரு சமணத் திருமேனி அமணீசுவரர் என்னும் பெயருடன் இங்கு இருக்கிறது. இங்கிருந்த பழைய சமணக் கோயிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு சிவன் சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்.233 சிவன் சமுத்திரம் கொள்ளேகாலுக்கு வடகிழக்கே 9 மைலில் உள்ளது. இங்குள்ள சமணக் கோயிலுக்கு நெட்டைக் கோபுரம் என்பது பெயர்.
5. பெருந்துறை: பூந்துறை என்றுங் கூறுவர். ஈரோடு நகரத்திற்குத் தென்மேற்கு 101/2 மைலில் உள்ளது இவ்வூர். விசயமங்கலம் என்னும் சமணக் கிராமம் இதற்கு அருகில் உண்டு. இங்கு இடிந்துபோன சமணக்கோயில் உண்டு. இக்கோயில் பார்சுவநாத தீர்த்தங்கரருடையது. இங்கே சில சமண உருவங்கள் உள்ளன.234
6. விசயமங்கலம்: ஈரோடு தாலுகாவில் விசயமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 4 மைலில் உள்ள மேட்டுப்புத்தூரில் ஒரு சமணக்கோயில் உண்டு. இது ஆதீசுவரர் கோயில். இங்குச் சில சமண சிற்பங்கள் காணப்படுகின்றன. விசயமங்கலத்தில் சந்திரப் பிரப தீர்த்தங்கரரின் ஆலயம் உள்ளது. பெருங்கதை என்னும் காவியத்தை இயற்றிய கொங்குவேள் என்னும் சமணர் இவ்வூரில் வாழ்ந்தார் என்பர். சிலப்பதிகார உரையாசிரியாரகிய அடியார்க்கு நல்லார் என்பவரும் இவ்வூரினர் என்பர். இவ்வூரில் சமண உருவங்கள் உள்ளன.235 விசயமங்கலத்துக்கு அருகில் அரசண்ணாமலை என்னும் குன்று இருக்கிறது. இக்குன்றின் மேல் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது அக்கோயில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது.
7. ஆனைமலை: பொள்ளாச்சித் தாலுகாவில் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 71/2 மைலில் இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கே சமணக்கல் துர்க்கம் என்னும் ஒரு குன்று உண்டு.236 இந்தப் பெயரே இங்குச் சமணர் இருந்தவர் என்பதைத் தெரிவிக்கிறது. இங்குள்ள யானை மலைக்காடு என்னும் இடத்தில் ஒரு சமணக் கோயில் உண்டு.
8. வெள்ளோடு: மேலே குறிப்பிட்ட பூந்துறைக்கு 5 மைல் தூரத்தில் உள்ளது. ஆதிநாதர் என்னும் ரிஷப தீர்த்தங்கரரின் கோயில் இங்கு உண்டு.
9. திங்களூர்: ஈரோடு தாலுகாவில் உள்ளது இவ்வூர். புஷ்பநாதர் என்னும் சமண தீர்த்தங்கரரின் கோயில் ஒன்று இங்கு இருக்கிறது.237
10. முடிகொண்டம்: கொள்ளேகால் தாலுகாவில் உள்ளது இவ்வூர். முற்காலத்தில் சமணர் இங்கு இருந்தனர். முடிகொண்ட சோழபுரம் என்பது இதன் பழைய பெயர். இவ்வூர்க் குளத்தின் தென்கரைப் படியில் உள்ள சிதைந்து போன சாசனம் ஒன்று சக ஆண்டு 1031 இல் எழுதப்பட்டது. முடிகொண்ட சோழபுரத்தில் இருந்த சந்திரப் பிரபசுவாமி கோயில் என்னும் சமணக் கோயிலுக்கு ஒரு கிராமம் தானம் செய்யப்பட்ட செய்தியை இந்தச் சாசனம் கூறுகிறது.238 முடிகொண்ட சோழன் என்பது முதலாவது இராசராசன் பெயர் ஆகும்.
11. திருமூர்த்திமலை: உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் உடுமலைப்பேட்டையிலிருந்து கிழக்கே 11 மைலில் உள்ளது. ஆனைமலைக்குன்றின் அடிவாரத்தில் உள்ள ஊர், இங்குள்ள ஓர் அருவியின் பக்கத்தில் 30 அடி உயரம் உள்ள பாறையும் இப்பாறையில் ஒரு சமணத் திருமேனியும் காணப்படுகின்றன. சமணத் திருமேனியின் அருகிலே பரிவாரத்தெய்வங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இவ்வுருவங்கள் தேய்ந்து மழுங்கிக் காணப்படுகின்றன. இந்தப் பாறையானது மலையின்மேலிருந்து உருண்டு விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சாசனம் ஒன்று இத்திருமேனியை அமணசாமி என்றும் இவ்வூருக்கு அமணசமுத்திரம் என்பது பெயர் என்றும் கூறுகிறது. அமணசாமி அமணசமுத்திரம் என்னும் பெயர்களே இங்குச் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. இப்போது இந்த இடம் திரிமூர்த்திமலை என்று வழங்கப்படுகிறது.239 திருமூர்த்தி என்பது அருகக் கடவுளுக்குப் பெயர். இந்தத் திருமூர்த்தி என்னும் பெயரைத் திரிமூர்த்தி என்று மாற்றி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் திரிமூர்த்தியைக் குறிக்கிறது என்று இப்போது கூறுகிறார்கள்.
12. சீனாபுரம்: ஈரோடு தாலுகாவில் உள்ளது. இங்குச் சமணருடைய ஆதிநாதர் கோயில் உண்டு. இந்தச் சீனா புரந்தான் பண்டைக் காலத்தில் சனகாபுரம் என்று வழங்கப்பட்டதென்றும், இங்குப் பவணந்தி முனிவர் வாழ்ந்திருந்து நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றினார் என்றும் கூறுவர். பவணந்தி முனிவரின் சனகாபுரம் இது அன்று என்றும் அது வேறு ஊர் என்றும் வேறு சிலர் கருதுவர். (செந்தமிழ் 5 ஆம்தொகுதி காண்க).
13. மேட்டுப்புத்தூர்: ஈரோடு தாலுகாவில் இங்கு ஒரு சமணக் கோயில் இருக்கிறது
No comments:
Post a Comment