Saturday, July 3, 2021

 வழுதலங்குணம் - சமணச் சிற்பமும், துறவிகளின் படுக்கைகளும்


கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் சிறிய குன்றின் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணச் சிற்பமும், துறவிகளின் படுக்கைகளும் காணப்படுகின்றது.  இம்மலையின் கிழக்கு முனையில் இயற்கையான சமணர் குகை அமைந்துள்ளது.  இந்த குகைக்குச் செல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு தான் படிகள் அமைந்துள்ளனர். மிகப்பெரும்பாறைகளால் ஆன இந்த குகைக்பகுதியில் 21 சமணப் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இவைகளின் காலம் கி.பி 8 – 9 நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம்.







இக்குகையின்  மேற்புரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள ஆதிநாதர் தீர்த்தங்கரரின் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. பரியங்காசன தோற்றத்தில் உள்ள இற்சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  தீர்த்தங்கரரின் மேலே முக்குடையும் தீசுவாலையுடன் கூடிய அரைவட்ட பிரபையும் அதன் பழமையைக் காட்டுகிறது. பக்கவாட்டில் செதுக்கப்பட்டுள்ள பிண்டிமர மரபூங்கொடி வளைவுகள் இச்சிற்பத்திற்கு அழகூட்டுகிறது. அரியணையைத் தாங்கும் பீடத்தில் சிங்கள் மூன்று அமர்ந்த நிலையில் உள்ளன. தீர்த்தங்கரரின் இருபுறமும் செதுக்கப்பட்ட சாமரதாரியர் உருவங்களும் காணப்படுகின்றன. இச்சிற்பத்தின் கீழே கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது அதில

மென்தாரையூரில் யிருக்கும் பள்ளி

கண்ட மருதுபிரசுறை தெவரை கல்

யிட்டு காக்க காரையிட்டு புதுக்கிநேந்.”

என்று உள்ளது. அதாவது இவ்வூரின் பழைய பேரான மென்தாரையூரில் உள்ள பாழியில் குடிகொண்ட மருதுபிரசுரை தேவரின் சிற்பத்தை காக்கும் பொருட்டு காரை பூசி புதுப்பித்தேன் என எழுதப்பட்டுள்ளது.





 

இத்தீர்த்தங்கர் மருதேவியின் மகன் ஆதிநாதர் என்ற அர்த்தத்தாலே மருதுபிரசுரை தேவர் எனப்பட்டார். எனவே இச்சிற்பம் ஆதி நாதர் சிற்பமே என்பது ஆய்வாளர்களின் கருத்து.

திருவண்ணாமலை மாவட்டத்தில அதிக எண்ணிக்கையிலான சமணற் கற்படுக்கைகள் உள்ள பகுதி இதுவாகும். இங்கு மொத்தம் 21சமணக் கற்படுக்கைகள் உள்ளன.

வழுதலங்குணம் பாழியில் மிக அதிக எண்ணிக்கையில் அக்காலத்தில் துறவியர் தங்கியிருந்தர்க்கு இப்படுக்கைகளே ஆதாரமாக திகழ்கின்றன. இங்கும் ஒரு சங்கம் பழங்காலத்தே இயங்கி இருக்கக்கூடும்.  காக்கப்படவேண்டிய அரிய பொக்கிஷம்.






தற்பொழுது இம்மலையில் உள்ள படுக்கைள் சேதப்படுத்தியும் – சமையல் கூடமாக மாற்றியும் – கண்ணாடி பாட்டில்கள் உடைத்தும் – பெயிண்ட்டால் எழுதியுள்ளனர்.    மிகபெரிய சமண ஊர்கள் உள்ள திருவண்ணாமலை சுற்றியுள்ள மக்கள்  மாதம் ஒருமுறையேனும் தீர்த்தங்கரரை வழிபட்டு – படுக்கைகளை சுத்தம் செய்து வந்தால் மட்டுமே இத்தீர்த்தங்கரை காப்பாற்ற முடியும்….

இம்மலையில் கைப்பிடி சுவர்கள், படிக்கட்டுகள் 2004 ஆம் ஆண்டில்  புதுப்பிக்கப்பட்டுள்ளது என  ஸ்ரீ பார்சுவநாதர்  ஜைன அறக்கட்டளை, சென்னை கல்வெட்டில்  எழுதப்பட்டுள்ளது.

இத்தகைய வரலாற்றுப் புகழ்மிக்க இம்மலையை வருடத்தில் இருமுறையேனும் தரிசித்தால்  மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்…