Wednesday, September 28, 2016
Wednesday, September 21, 2016
Tuesday, September 20, 2016
Saturday, September 3, 2016
குன்றக்குடி சமணர் படுகைகள் - பிராமி கல்வெட்டு
செட்டிநாட்டுப்பகுதியின் நடுநாயகமான குன்றக்குடி மலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரபு உடையது. இச்சிறுகுன்றில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டு உள்ளது. சமணர் படுக்கைகள் உள்ளன. இன்றைய யானைகட்டி மண்டபத்தின் வலப்பக்கமுள்ள வாயிலில் நுழைந்தால் ஒன்பது, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று குடவறைச் சிவன் கோவில்கலைக்காணலாம். இவை தொல்லியல் துறை மேற்பார்வையில் இருக்கின்றன. மாமல்லபுரத்துச் சிற்பங்களையொத்த சிற்பங்கள் உள்ளன. பிள்ளையார்பட்டி விநாயகரைப்போன்ற ஆனால் சிறிய திருவுரு உள்ள வலம்புரி விநாயகர் புடைப்புச் சிற்பம் உள்ளது. தலையில் மூன்று சிவலிங்கங்களைத் தாங்கியுள்ள அரிய சிற்பம் அதுவாகும். சோழர்கள் கால, பிற்கால பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து ஜெர்மனியிலிருந்து வந்திருந்த இனிய நண்பர் திருமிகு சுபாஷிணி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாக மின்தமிழ் குழுமத்தில் பதிவிட்டிருந்தார்.(http://www. tamilheritage.org/thfcms/ index.php/2008-12-05-21-27-39/ 2012-04-07-07-12-08/2012-04- 12-18-54-24 www.tamilheritage. org › ... › )
ஏற்கனவே குடவறைக்கோயில்களை பார்த்திருந்த நான் பக்கத்திலிருந்தும் பிராமி கல்வெட்டினைப் பார்க்கவில்லையே என்று எண்ணியிருந்தேன்.
நண்பர்களிடம் விசாரித்தபோது அவர்கள் குடவறைக்கோயிகளையே பார்க்கவில்லையென்பது தெரியவந்தது.
சென்ற மாதம் தருமைக்குருமணி மேல்நிலைப்பள்ளியில் உரைநிகழ்த்தச்சென்றிருந்தபோது அன்று மாலை குன்றக்குடி மலையின் மேற்குப் பகுதியிலுள்ள ஞானியார் மலை என்று அழைக்கப்படுகிற சமணர் படுக்கையுள்ள பகுதிகளைச் சென்றுபார்த்துவந்தேன்.
பொய்கை வழியாகவும் அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள பாதை வழியாகவும் எளிதாகப் பாறைகள் உள்ள மலையின் மேற்குச் சரிவுப்பகுதிக்குச் செல்லலாம். கல்லில் வெட்டப்பட்டுள்ள குளம், பிற்காலத்திய சிறிய பிள்ளையார்கோவில், பைரவர், அனுமார், முனிவர் சிலைகள் உள்ளன. குகை போன்ற பகுதியில் ஒரு புறத்தில் சமணர் பள்ளியின் ஐந்து கல்படுக்கைகளும் மறுபகுதியில் மூன்று படுக்கைகளும் உள்ளன. முகப்பில் பிராமி கல்வெட்டு இருக்கிறது. அது சமண முனிவர்களுக்கான படுக்கைகளை அமைத்தவர் பெயராக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். “சாத்தன் ஆதன்” என்ற பெயர் வித்தியாசமான முறையில் பொறிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
தனிமையில் அந்தப்பகுதியில் நிற்கும்போது சொல்லமுடியாத மனம்நிறைந்த உணர்வு மேலோங்குகிறது. படங்கள் பகிர்ந்துள்ளேன். நண்பர்கள் குன்னக்குடியான் அருள்பெறுவதோடு வாய்ப்பேற்படுத்திக்கொண்டு குன்றக்குடியிலுள்ள அரிய குடவறைக்கோயில்களையும் சமணப்படுக்கையுள்ள ஞானியார்மலைப்பகுதியையும் பிள்ளைகளுடன் காணவேண்டுகிறேன். தனி அனுபவமாக அது அமையுமென்பது உறுதி.
உத்தமபாளையம் சமணர்கோயில்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது
சமணர்கோயில். இம்மாவட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட சமணர்கள் இல்லை. அதே வேளையில் 6 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளனர். அவற்றிற்கு சான்றாக பல கல்வெட்டுக்கள் சாட்சியம் கூறுகின்றன. கால ஓட்டத்தால் கரைந்து போன வரலாற்று எச்சங்களில் சமணர்களும் ஒன்று. அதைப்பற்றி இனி காண்போம்.
கி.பி.2 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சமண மதம் வேகமாக துவங்கியது. அப்போது சிறுதக்கவள்ளி, பத்திரபாகு என்ற சமண போதகர்கள் தலைமையில் கர்நாடாகாவில் சிரவெண பெல கோலா பகுதிக்கு ஏராளமான துறவிகள் வந்தனர். அடுத்துப் பல சமணர்துறவிகள் விகாச்சாரியா என்பவர் தலைமையில் தமிழகத்திற்குள் நுழைந்து மதுரை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, கழுகுமலை, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் தங்கினார்கள். உத்தமபாளையம் பகுதியில் கருப்பணசாமி கோயில் பகுதி. இக்கோயில் பகுதியில் சமணத்துறவிகள் அச்சநந்தி என்ற துறவி தலைமையில் ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர். அப்போது உத்தமபாளையத்திற்கு சமணத்துறவிகள் இட்டபெயர் திருப்புனகிரி. இந்தப்பகுதியில் குடியேறிய சமணத்துறவிகள் இப்பகுதியை சமணப்பள்ளியாகவே மாற்றினார்கள். இப்பகுதியில் உள்ள மலையைக் குடைந்து சுத்தநீருக்கு சுணைகளை உருவாக்கி இங்கேயே குடிஅமர்ந்தனர்.
இங்கு பள்ளிகளை அமைத்து பகல் வேளையில் கல்வி போதித்துள்ளனர். மூலிகை மருத்துவம் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்துள்ளனர். இங்கு சமண சமய தீர்க்க தரிசிகளான 23ஆம் தீர்த்தங்கரர் எனப்படும் பசுவநாதர், 24ம் தீர்த்தரங்கரர் எனப்படும் மகாவீரர் ஆகிய இருவரது திருவுருவங்கள் உள்ளது. முதல் வரிசையில் ஆறு சிற்பங்களும், இரண்டாம் வரிசையில் எட்டுச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் நீளம் இருபது அடி. உயரம் பத்து அடியாகும்.
சிற்பங்களின் மீது சூரிய ஒளிபடாமல் இருக்க சுஜாரூப்(சமஸ்கிருத சொல்) எனப்படும் மறைப்புகள் இருந்துள்ளன. அவை அருகிலேயே கல் மண்டபமும் உண்டு. இதில் பசுவநாதர், மாகவீரர் சிற்பங்கள் உள்ளன. மேலே மூன்று தலைகள் கொண்ட நாகம் உள்ளது. பக்கவாட்டில் வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களும் உண்டு. இந்த சிற்பங்களுக்கு அருகில் பழங்கால தமிழ் வடிவங்களான வட்டெழுத்துக்களால் ஆன சில வாசகங்கள் உள்ள. அதில் அரட்டணமி, அஜநந்தி ஆகிய சமண முனிவர்கள் பெயர்கள் உள்ளன. இதில் அஜநந்தா என்பவர் பெயர் அப்போதைய பாண்டிய நாட்டில் இருந்த சமணக்கோயில்கள் அனைத்திலும் இருந்துள்ளது. மேலும் 9-ம் ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன்மாறன் பெயரும் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆகாரதானம்(உணவு), அவுசத்தானம்(மருத்துவம்), அட்சரதானம்(கல்வி), அவையதானம்(அடைக்கலம் தருதல்) ஆகியற்றை போதித்தனர். இங்குள்ள பாறை சிற்பங்களில் கனகநந்தி, அரிட்டனேமி என்ற பெயரும் 23ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
உத்தமபாளையம் கருப்பணசாமி கோயிலுக்கு செல்பவர்கள் இங்குள்ள சமணர்களையும் வணங்கி வருகிறார்கள். சமணர்கள் இப்பகுதியில் ஒருவர் கூட இல்லையென்றாலும், மதங்களை கடந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் இப்பகுதிக்கு சென்று வருகின்றனர். இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுற்றுலா செல்பவர்கள் இக்கோயிலை பார்வையிட உலகெங்கிலும் இருந்தும் வருகை புரிகின்றனர்.
நன்றி : http://siragu.com/?p=14142
Subscribe to:
Posts (Atom)